சென்னை: ககன்யான் திட்டத்தில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆளில்லா விண்கலம் ஒன்று விண்ணில் பாயும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ தெரிவித்தது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் நாராயணன், ராணுவப் பயன்பாட்டுக்காக ஆகப்பெரிய செயற்கைக்கோள் ஏவும் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“ககன்யான் திட்டத்தின்கீழ் முதற்கட்ட நடவடிக்கையாக ஆளில்லா விண்கலம் ஒன்று 2026, மார்ச் மாத இறுதிக்குள் விண்ணில் பாயும்.
இதற்கான கருவிகள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்துள்ளன. தற்போது அவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறது.
“அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளார் பிரதமர் மோடி. இது எளிதானது அல்ல. எனினும், தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்றார் நாராயணன்.
நடப்பு நிதியாண்டுக்குள் இஸ்ரோ மூலம் ஏழு திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உடனடியாக வணிக நோக்கத்தில், கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று ‘எல்விஎம் 3எம் 6’ உந்துகணை வாயிலாக விண்ணில் ஏவப்பட உள்ளது என்றார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடப்பதாகவும் தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் பகுதியில் ஏவுதளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்த பின், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம் என்றும் திரு நாராயணன் மேலும் கூறினார்.
இதனிடையே, புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

