ஏர் இந்தியா விமானங்களில் இலவச தென்னிந்திய உணவு வகைகள்

1 mins read
a3224025-448f-42d2-b2c7-7b1d73ad021c
ஜப்பானிய உணவுகளும் வழங்கப்படும் என ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: ஏர் இந்தியா விமானங்களில் தென் மாநில உணவுகளை இலவசமாக வழங்க உள்ளதாக, ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இது தொடர்பாக பயணிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், இப்படியோர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மும்பை, டெல்லி, கோல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில், இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் தென் மாநில உணவுகளில் குறிப்பாக, தமிழகத்தின் மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி ஆகியவை வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரியாணி, மலபாரி கோழிக் கறி, சிக்கன் பிம்பாப், வட மாநில சைவ, அசைவ உணவுகள், ஆசிய-ஐரோப்பிய நாடுகளின் உணவுகள், ஜப்பானிய உணவுகளும் வழங்கப்படும் என ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பயணியர் விமான டிக்கெட் பதிவின்போதே சைவமா அல்லது அசைவமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். முதற்கட்டமாக, அனைத்துலக விமானங்களில் மட்டும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றும் பயணியரின் வரவேற்பை பொறுத்து, உள்நாட்டு விமானச் சேவையிலும் சேர்க்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்