பீகாரில் இலவச மின்சாரம்

2 mins read
1092ae44-b53c-4bf4-8760-b3f59b58a838
பீகார் முதலமைச்சர் நிதி‌ஷ் குமார். - படம்: பிடிஐ

பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 125 புள்ளிகள் (units) வரையிலான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதி‌ஷ் குமார் வியாழக்கிழமை (ஜூலை 17) இதனை அறிவித்தார்.

இவ்வாண்டு இறுதியில் அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கிடையே இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் பீகார் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் இது குறித்து அதிகாரபூர்வத் தகவலை இதுவரை வெளியிடவில்லை.

“முன்பிருந்தே நாங்கள் மலிவு விலையில் மின்சாரம் விநியோகித்துவருகிறோம். இனி ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து, ஜூலை மாதத்துக்கான மின்சாரப் பயன்பாடு உட்பட, 125 புள்ளிகள் வரையிலான மின்சாரத்தைப் பயன்படுத்த எல்லா உள்ளூர்வாசிகளும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை,” என்று திரு நிதி‌ஷ் குமார் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார். பீகாரில் உள்ள மொத்தம் 16,700,000 குடும்பங்கள் இந்நடவடிக்கையால் பலனடையும் என்று அவர் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் பயனர்களின் அனுமதியுடன் வீடமைப்புக் கட்டடங்களின் கூரைகளிலும் அக்கம்பக்கத்துப் பொது இடங்களிலும் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்த மாநில அரசாங்கம் முடிவெடுத்திருப்பதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். அடுத்த மூவாண்டுகளில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திரு குமார் தெரிவித்தார்.

குத்திர் ஜோதி (Kutir Jyoti) திட்டத்தின்கீழ் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்த பீகார் அரசாங்கம், மிகுந்த வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு முழு செலவையும் ஏற்றுக்கொள்ளும், மற்றவர்களுக்குத் தகுந்த ஆதரவு வழங்கும்.

இதற்கிடையே, அரசாங்கப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டு ஆசிரியர் நியமிப்புத் தேர்வை (TRE) கூடுமானவரை விரைவில் நடத்துமாறு திரு குமார் புதன்கிழமை (ஜூலை 16) கல்விப் பிரிவுக்கு உத்தரவிட்டார். இது, நான்காவது கட்டமாக நடத்தப்படும் அரசாங்கப் பள்ளி ஆசிரியர் நியமிப்புத் தேர்வாகும்.

குறிப்புச் சொற்கள்