புனே: முன்னாள் வங்கி ஊழியர் ஒருவரை, அவரது உறவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குரலில் பேசி ரூ.4 கோடி ஏமாற்றியுள்ளார்.
மகாராஷ்டிராவின் புனே பகுதியைச் சேர்ந்தவர் 53 வயது சூர்யகாந்த் தோரட். முன்னாள் வங்கி ஊழியரான இவரை, அவரது உறவினர் 2019ஆம் ஆண்டு தொடர்புகொண்டு, தனது மகன் உளவுத்துறையில் பணியாற்றுவதாகக் கூறினார்.
மேலும், அத்துறையின் சிறப்புத் திட்டத்தில் முக்கிய பங்காற்றியதால் தனது மகனுக்கு மத்திய அரசு ரூ.38 கோடி பரிசளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
அந்தப் பரிசைப் பெறுவதற்கு செயல்முறை கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவதற்காகத் தனக்குப் பணம் தேவைப்படுவதாக அந்த நபர் சூர்யகாந்திடம் கூறினார்.
தான் கூறிய தகவலை நம்ப வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பேசுவதுபோல் வேறு நபர்களை வைத்து தொலைபேசி மூலம் சூர்யகாந்திடம் அந்த நபர் பேசவைத்தார்.
மேலும், பரிசுப் பணம் கிடைத்தவுடன் தான் பணத்தை திருப்பித் தருவதாகவும் அவர் சூர்யகாந்திடம் கூறினார்.
அதனை நம்பி, உறவினரின் வங்கிக் கணக்குகளில் 2020ஆம் ஆண்டு தொடங்கி சென்ற ஆண்டுவரை பல தவணைகளாக ரூ.4 கோடிக்கும் அதிகமானப் பணத்தைச் சூர்யகாந்த் அனுப்பினார்.
அதன் பின்னர், உறவினரிடம் சூர்யகாந்த் பணத்தை திருப்பிக் கேட்டபோது, மகன் சிறப்புப் பணிக்காக வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
உறவினர் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த அவர், அதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த மோசடி தொடர்பாக மகாராஷ்டிர பொருளியல் குற்றப்பிரிவு காவல்துறை, ஐவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

