பாலியல் வழக்கில் முன்னாள் எம்.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு

1 mins read
7b1da8fc-d6fa-4bfa-ad13-5668d61c07a1
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவிற்கான தண்டனை விவரம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: டெக்கான் ஹெரால்டு

பெங்களூரு: முன்னாள் இந்தியப் பிரதமர் எச்.டி. தேவ கவுடாவின் பேரனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலம், ஹாசன் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

இந்நிலையில், பிரஜ்வல் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் குற்றவாளி என்று மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் சனிக்கிழமை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேவண்ணா குடும்பத்திற்குச் சொந்தமாக கன்னிகடாவில் உள்ள விருந்தினர் இல்லத்தில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய 48 வயதுப் பெண்ணை 35 வயதான பிரஜ்வல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகாரளிக்கப்பட்டது. பிரஜ்வல் அதனைத் தம் கைப்பேசியிலும் காணொளியாகப் பதிவுசெய்ததாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல்மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்கு பதிந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டில் பிரஜ்வல் அப்பெண்ணை இருமுறை சீரழித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றப்பத்திரிகையில் 113 சாட்சியங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. வழக்கு விசாரணை கடந்த ஜூலை 18ஆம் தேதி முடிவடைந்தது.

பல்வேறு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பில் இணையத்தில் காணொளிகள் பரப்பப்பட்டன. அது தொடர்பான நான்கு வழக்குகளில் பிரஜ்வல்தான் முக்கியக் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 ஏப்ரல் மாதம் பிரஜ்வல் மீதான முதல் புகார் பதிவுசெய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்