சென்னை: சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவழியில் திரும்ப நேரிட்டது. ஈரானின் அணுவாயுதத் தளங்களில் அமெரிக்கா ஆகாயத் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈரானின் வான்வெளி மூடப்பட்டது இதற்குக் காரணம்.
இந்திய நேரப்படி காலை 5.30 மணி புறப்பட வேண்டியிருந்த விமானம், கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் தாமதமாகி 6 24 மணிக்குப் புறப்பட்டது. அந்த விமானத்தில் 206 பயணிகள் இருந்தனர்.
இந்திய வான்வெளியைக் கடந்து அரபியக் கடல் வட்டாரத்திற்குள் விமானம் புகுந்த பிறகு, ஈரான் குறித்த வான்வெளி மூடல் பற்றிய தகவல் விமானிகளுக்குக் கிடைத்தது.
விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்ப முடிவெடுக்கப்பட்டது.. அந்த விமானம் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஈரானிய வான்வெளி மூடலால் இவ்வாறு நடந்ததாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் உறுதி செய்தது.
வான்வெளி பாதிப்பால் மற்ற பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து குவெய்த், டோஹா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்த விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாயின.