புதுடெல்லி: இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஐந்து மில்லியன் இருக்கைகளுக்கான பயணச்சீட்டுகளைச் சலுகைக் கட்டணத்தில் விற்கப் போவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் வரையிலும் தனது இணையத்தளம், கைப்பேசிச் செயலி, பிற பயணச்சீட்டுத் தளங்கள் வழியாக முன்பதிவு செய்வோருக்கே இந்தச் சலுகை கிட்டும்.
‘விடுதலை விற்பனை’ என்ற அந்த அறிவிப்பின்கீழ் உள்நாட்டு விமானங்களுக்கு 1,279 ரூபாயிலிருந்தும் அனைத்துலக விமானங்களுக்கு 4,279 ரூபாயிலிருந்தும் பயணச்சீட்டுக் கட்டணங்கள் தொடங்குகின்றன.
2025 ஆகஸ்ட் 19ஆம் தேதியிலிருந்து 2026 மார்ச் 31ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கே இச்சலுகை பொருந்தும்.
‘எக்ஸ்பிரஸ் லைட்’, ‘எக்ஸ்பிரஸ் வேல்யூ’, ‘எக்ஸ்பிரஸ் பிஸ்’ போன்ற வெவ்வேறு பிரிவுகளிலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சலுகைகளை அறிவித்துள்ளது.
அத்துடன், தனது ‘லாயல்டி’ திட்ட உறுப்பினர்களுக்கும் அந்நிறுவனம் கூடுதல் கட்டணக் கழிவை வழங்குகிறது.
மேலும், மாணவர்கள், மூத்த குடிமக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆகியோருக்கான சிறப்புக் கட்டணங்களும் சலுகைகளும் தொடரும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
மொத்தம் 116 விமானங்களைக் கொண்டுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நாளொன்றுக்கு 500 விமானச் சேவைகளை வழங்குகிறது. உள்நாட்டில் 38 இடங்களுக்கும் அனைத்துலக அளவில் 17 இடங்களுக்கும் அது விமானங்களை இயக்கி வருகிறது.

