பெங்களூரு: கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரு நகரின் நகரத்பேட்டை பகுதியில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) கட்டடம் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் சீமாந்த் குமார் சிங்குடன் சம்பவ இடத்திற்குச் சென்று நிலவரத்தை மேற்பார்வையிட்டார்.
இதன் தொடர்பில் ஏஎன்டி செய்தி ஊடகத்திடம் பேசிய காவல்துறை ஆணையர் சீமாந்த் குமார் சிங், “தீயணைப்புத் துறையின் ஆரம்ப ஆய்வின்படி, மின்சாரக் கோளாறு காரணமாக தீ ஏற்பட்டதாகத் தெரிய வந்தது. எனவே நாங்கள், இந்த இரண்டு கட்டடங்களின் உரிமையாளர்களைக் கைது செய்துள்ளோம். பாதுகாப்பு விதிகளை மீறியே அவர்கள் மேல்தளங்களைக் கட்டியுள்ளனர்,” என்று கூறனிார்.
துணை முதல்வர் சிவகுமார், கட்டட விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். “நடந்தது மிகவும் துயரமானச் சம்பவம். மதிப்புமிக்க ஐந்து உயிர்கள் பிரிந்தன. இது மீண்டும் நடைபெறக்கூடாது,” என்றார் திரு சிவக்குமார்.

