தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிரோடு இருப்போரை இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம்

2 mins read
822f0922-97e8-4e4c-90ff-13b09f227e47
‘மாண்டுபோனதாக’ கூறப்பட்ட வாக்காளர்கள் மண்டல வளர்ச்சி அலுவலரைச் சந்தித்து புகாரளித்தனர். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் இரு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், தோரையா தொகுதியிலுள்ள பத்சர் எனும் சிற்றூரைச் சேர்ந்த குறைந்தது ஐவர், தாங்கள் இறந்துவிட்டதாகக் கூறி, தங்களது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, அந்த ஐவரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) மண்டல வளர்ச்சி அலுவலர் அரவிந்த்குமாரை நேரில் சந்தித்து, தாங்கள் ‘உயிருடன் இருப்பதாக’ கூறி புகார் அளித்தனர்.

மோகன் ஷா, சஞ்சய் யாதவ், ராம்ரூப் யாதவ், நரேந்திர குமார் தாஸ், விஷ்ணுவர் பிரசாத் என்ற அவர்கள் ஐவரும், இந்திரதேவ் மண்டல் எனும் சமூக ஆர்வலரின் துணையுடன் அலுவலரைச் சந்தித்தனர்.

இந்தத் தவற்றால் தங்களால் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகலாம் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் திரு குமார் உறுதியளித்தார். ‘படிவம்-6’ஐப் பூர்த்தி செய்து, அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும்படி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலருக்கு அவர் அறிவுறுத்தினார்.

தகுதியுள்ள வாக்காளர்கள் எவரும் தங்கள் வாக்குரிமையை இழக்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.

முன்னதாக, சம்பரன் தொகுதியில் தும்ரி எனும் சிற்றூரைச் சேர்ந்த 15 பேர் இறந்துவிட்டதாகக் கூறி, அவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், 2016ஆம் ஆண்டிற்கு முன்னரே இறந்துவிட்டவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகக் கூறப்பட்டது.

பீகாரின் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

குறிப்புச் சொற்கள்