புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதை அடுத்து, அந்நகரின் காற்றுத் தரம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) மோசமடைந்தது.
காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையில் (சிவப்பு எச்சரிக்கை நிலை) இருப்பதாக 37 கண்காணிப்பு நிலையங்களில் 34 நிலையங்கள் பதிவிட்டன.
புதுடெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி புகைமூட்டத்தில் மூழ்கியிருப்பதைக் காட்டும் காணொளிகளை இந்திய செய்தி நிறுவனங்கள் பகிர்ந்தன. நகரெங்கும் உள்ள பல முக்கிய சாலைகளில் பார்க்கக்கூடிய நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் டெல்லியிலும் அதன் அருகில் உள்ள நகரங்களிலும் புகைமூட்டம் மோசமடைந்து மிகவும் கடுமையான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை மையம் வெளியிட்ட தரவுகளின்படி, நொய்டாவிலும் காசியாபாத்திலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
தீபாவளிக்கு முதல் நாளன்றும் தீபாவளித் திருநாளன்றும் புதுடெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமைப் பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.