ஹைதராபாத்: தனியார் பேருந்தும் மோட்டார்சைக்கிளும் மோதியதால் எரிபொருள் கசிந்து தீப்பற்றியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்விபத்து இந்தியாவின் பெங்களூரு - ஹைதராபாத் நகரங்களுக்கு இடையே, கர்னூல் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அதிகாலை 2.45 மணியளவில் நேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
“பேருந்தில் இருந்த 42 பேரில் 18 பேர் மீட்கப்பட்டுவிட்டனர்,” என்று மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்ததாக ஏஎன்ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.
தீயின் பிடியில் சிக்கி மாண்டோரில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
கர்னூல் நகரிலிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சின்னதெக்கூர் எனும் சிற்றூருக்கு அருகே இவ்விபத்து நேர்ந்தது.
ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ‘காவேரி டிராவல்ஸ்’ பேருந்தின் முன்பக்கத்தில் பற்றிய தீ, மளமளவென பேருந்து முழுவதும் பரவியதாகக் கூறப்பட்டது.
பேருந்தில் இருந்த பயணிகளில் 12 பேர் சிறுகாயங்களுடன் அவசரகால வெளியேற்ற வழிமூலம் தப்பினர். காயமடைந்தவர்கள் கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்ததும் உள்ளூர்க் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வண்டிகள் வருமுன்னரே உள்ளூர்வாசிகளும் அவ்வழியே சென்றோரும் பேருந்தில் பற்றிய தீயை அணைக்க முயன்றதாக சம்பவத்தை நேரில் கண்டோர் கூறினர். ஆயினும், மீட்புப் படையினர் வருவதற்கு முன்பே பேருந்து முழுமையாகத் தீயின் பிடியில் சிக்கிக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
தீப்பற்றியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் பெய்த கடுமையான மழைக்கு இடையே இந்தத் தீ விபத்து நேர்ந்ததாகவும் அதனால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதனையடுத்து, தலைமைச் செயலாளருடனும் காவல்துறைத் தலைமை இயக்குநருடனும் உடனடியாக ஆலோசனை நடத்திய தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, துயர்துடைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
சென்ற மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் இதுபோன்று தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நேர்ந்த சாலை விபத்துகளில் ஏறக்குறைய 180,000 பேர் உயிரிழந்ததாக இவ்வாண்டு ஜனவரியில் வெளியான புள்ளிவிவரம் குறிப்பிட்டது.

