புதுடெல்லி: அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுவதால் ஏர் இந்தியா நிறுவனம் இயக்கிவரும் போயிங் 787 விமானங்கள் அனைத்தையும் சேவையிலிருந்து நிறுத்தி, முழுமையான சோதனைக்குட்படுத்த வேண்டுமென இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சிடம் இந்திய விமானிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானங்களைப் பொது விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககம் சிறப்புத் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் அக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “2025 ஜூன் 16ஆம் தேதியிலிருந்தே இந்தியா இயக்கிவரும் அனைத்து போயிங் 787 விமானங்களின் மின்கட்டமைப்புகளை முழுமையாகச் சோதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்,” என்று விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் சிஎஸ் ரந்தாவா குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இங்கிலாந்தின் பர்மிங்ஹம் விமான நிலையத்தை நெருங்கியபோது ஏர் இந்தியா விமானத்தின் ‘ரேம் வளிச்சுழலி’ தானாக இயங்கத் தொடங்கியது அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அண்மையில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவிலிருந்து டெல்லி சென்ற ஏஐ-154 விமானத்தில் தானியக்க விமானி அமைப்பு திடீரெனச் செயலிழந்து, அதனால் மேலும் பல தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டதால் அவ்விமானம் துபாயில் தரையிறங்கியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களால் ஏஐ-171 விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியதில் 260 பேர் மாண்டுபோனதையும் விமானிகள் கூட்டமைப்பு தனது கடிதத்தில் குறிப்பிடத் தவறவில்லை.
“இந்தியாவால் இயக்கப்படும் போயிங் 787 விமானங்களில் ஏற்பட்ட இத்தோல்விகளுக்கான காரணங்கள் குறித்து ஆராயாததால் விமானப் பயணத்தின் பாதுகாப்பு விட்டுக்கொடுக்கப்படுகிறது. அதனால், அனைத்து போயிங்-787 விமானங்களையும் தரையிறக்கி, அவற்றை முழுமையாக, குறிப்பாக அவற்றின் மின்னமைப்புகளைச் சோதிக்க வேண்டும் எனக் கோருகிறோம்,” என்று விமானிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.
மேலும், குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்ட இரு மின்கோளாறுகள் ஏர் இந்தியாவின் மோசமான சேவைத் தரத்தைக் காட்டுவதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. புதிதாகப் பணியமர்த்தப்பட்ட பொறியாளர்கள் விமானப் பராமரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளதே அத்தகைய நிகழ்வுகளின் அதிகரிப்பிற்குக் காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பர்மிங்ஹம் விமானத்தில் ‘ரேம் வளிச்சுழலி’ இயங்கியதற்கு அமைப்புக் கோளாறோ விமானியின் செயலோ காரணமில்லை என்றும் ஏஐ-154 விமானத்தில் மின்கோளாறு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஏர் இந்தியா மறுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“ஏர் இந்தியாவைப் பொறுத்தவரை, பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கே மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.