லத்தூர்: மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான 75 வயது அம்பதாஸ் பவாருக்கு 2.5 ஏக்கர் நிலம் இருக்கிறது.
அந்த நிலப்பகுதியை எருதோ அல்லது இயந்திரம் வைத்தோ உழுது பயிர் செய்ய அவரிடம் வசதி இல்லை. அதனால், தானே எருதாக மாறி மனைவியின் உதவியுடன் பல ஆண்டுகளாக மரக்கலப்பையைக் கொண்டு அவர் நிலத்தை உழுது வந்தார்.
மேலும், தான் வாங்கிய விவசாயக் கடனையும் அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் அவர் வாடியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், மனைவியின் உதவியுடன் நிலத்தை முதியவர் அம்பதாஸ் உழுவது தொடர்பான காணொளி வெளியானது. கடந்த வாரம் வெளியான அக்காணொளியைக் கண்ட இணையவாசிகள் பலர் அவருடைய வறுமை நிலையை எண்ணி வருந்தினர்.
இதனையடுத்து மகாராஷ்டிர கூட்டுறவு அமைச்சர் பாபாசாகேப் பாட்டில் ஜூலை 5ஆம் தேதி அம்பதாஸ் பவார் வீட்டுக்குச் சென்றார்.
அந்த மூத்த விவசாயி வாங்கிய விவசாயக் கடனான ரூ.42,500ஐ செலுத்திய அமைச்சர், அதற்கான சான்றிதழையும் அம்பதாசுக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டார்.
முன்னதாக, ஜூலை 4ஆம் தேதி லத்தூர் மாவட்ட ‘கிரந்திகாரி ஷேத்கரி சங்காதன்’ என்ற அமைப்பு இரு மாடுகளை அவருக்குப் பரிசாக வழங்கியது.