தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ 3,000 கோடிக்கு வாழைப்பழம் ஏற்றுமதி

2 mins read
cbf13a74-fbdb-46df-8d58-d68800103d8b
இந்தியாவிலிருந்து ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஓமன், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. - படம்: பிக்சாபே

மும்பை: இந்தியாவிலிருந்து திராட்சையே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதை வாழைப்பழம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

கடந்த 2023-24 நிதியாண்டில் 2,474 கோடி ரூபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

2024-25 நிதியாண்டில் வாழைப்பழ ஏற்றுமதி ரூபாய் 3,209 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 விழுக்காடு அதிகம் ஆகும்.

இந்திய வாழைப்பழங்களுக்கு வெளிநாட்டுச் சந்தையில் எந்தளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

இந்தியாவிலிருந்து ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஓமன், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2024-25 நிதியாண்டில் ஈராக் நாட்டிற்கு மட்டும் 47 விழுக்காடு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 2023-24 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட வாழைப்பழத்தைக் காட்டிலும் இது 108 விழுக்காடு அதிகம் ஆகும்.

தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு

தற்போது இஸ்ரேல்- ஈரான் பூசல் நடந்து வருவதால் ஈரான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்வதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ஈரான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து அதிகளவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நடந்து வருவதால் இந்தியாவிலிருந்து அங்கு அனுப்புவதற்குத் தயாராக உள்ள தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் ரூபாய் 100 கோடி முதல் ரூபாய் 150 கோடிவரை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தேயிலை, வாழைப்பழம் ஆகியவற்றுடன் முட்டை, பாஸ்மதி அரிசி, கோதுமை, முந்திரி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள், சர்க்கரை, காய்கறிகள், பழங்கள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வாழைப்பழ ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாழைப்பழ விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மென்பொருள், தொழில்துறை என்று பல துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் விவசாயத்தை முக்கிய தொழிலாகவே தற்போதும் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்