பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள்கள்

1 mins read
c644e152-b0c1-44cb-9dfe-8d5210702c44
ஆறு ஜெலட்டின் குச்சிகளும் அதை வெடிக்கவைக்கும் சாதனமும் பைகளில் இருந்தன. - படம்: பெங்களூரு காவல்துறை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரபரப்பான கலசிபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பொதுக் கழிவறைக்கு வெளியே வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதன்கிழமை (ஜூலை 23) பிற்பகல் 2 மணிவாக்கில், கழிவறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பைகளில், ஆறு ஜெலட்டின் குச்சிகளும் அதை வெடிக்கவைக்கும் சாதனமும் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான பைகுறித்து தகவல் கிடைத்ததும், பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று வெடிபொருள்களை மீட்டனர்.

வெடிபொருள்கள் தனித்தனி பைகளில் வைக்கப்பட்டு இருந்ததாக மேற்கு மண்டலத் துணை ஆணையர் எஸ். கிரிஷ் உறுதிப்படுத்தினார்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியாளர்கள் பிற்பகல் 1:15 மணியளவில் கழிவறை அருகே அந்தப் பையைக் கண்டெடுத்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாகக் காவல்துறை கூறியது.

ஆரம்பக்கட்ட விசாரணையில் மீட்கப்பட்ட வெடிபொருள்கள் சாதாரணமாகக் கல் குவாரிகளில் பயன்படுத்தப்படுபவையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

கலசிபாளையம் மத ரீதியாக முக்கியமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருப்பதால், இந்தச் சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் பெங்களூருவில் 40க்கும் மேற்பட்ட தனியார்ப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்