போபால்: மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றி வந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வின்போது சக ஊழியர்கள் அவரை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றது தங்களுடைய அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர்.
மத்தியப் பிரதேசம், சியோனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த சன்ஸ் கிருதி ஜெயின், குறுகிய காலத்தில்
மிகச் சிறப்பாக பணியாற்றி அம்மாவட்ட மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, நிர்வாக காரணங்களுக்காக சன்ஸ் கிருதி ஜெயின் உட்பட 12 மாவட்ட ஆட்சியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதனால் ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் சியோனி மாவட்ட மக்களும் சோகமடைந்தனர்.
அடுத்து, போபால் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள சன்ஸ் கிருதி ஜெயினுக்கு சிறப்பான முறையில் பிரியாவிடை கொடுக்க அவர்களது அலுவலக ஊழியர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, அன்னப்பறவை வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பல்லக்கை ஏற்பாடு செய்து, அதில் சன்ஸ்கிருதியையும் அவரது இரு மகள்களையும் அமர வைத்து, சக ஊழியர்களே அவர்களைச் சிறிது தூரம் சுமந்து சென்று அன்பை வெளிப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
36 வயதான சன்ஸ்கிருதி, காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் இருவருமே இந்திய விமானப் படையில் பணியாற்றியவர்கள்.