தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரதட்சணை வழக்கு: நீதி கேட்டு மாமியார் வீட்டின் முன் தேநீர்க் கடை நடத்தும் கணவர்

2 mins read
0df498e9-127e-4016-a075-b770466932c9
கடையில் இருக்கும்போதெல்லாம் தன் கையில் விலங்கு பூட்டியக் கோலத்துடன் காணப்படுகிறார் கிருஷ்ணகுமார். - படம்: ஊடகம்

ஜெய்ப்பூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் தகாத் என்பவர் தன் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்கொள்ள, தன் மாமியார் வீட்டின் முன் தேநீர் கடை நடத்துகிறார்.

தேநீர் கடைக்கும் வழக்குக்கும் என்ன தொடர்பு என்று கேட்பவர்களுக்கு, இதன் மூலம் தமக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகச் சொல்கிறார் கிருஷ்ணகுமார்.

இவருக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த மீனாட்சி மாளவை என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

புதுமணத் தம்பதியர் தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டனர். ஆனால், இந்த தொழில் சரிவைச் சந்தித்த நிலையில், குடும்பத்துக்குள் புகைச்சல் மூண்டது.

தன் கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்தார் மீனாட்சி. இதையடுத்து, கிருஷ்ணகுமார் மீது வரதட்சணை வழக்குப் பதிவானது.

நீதிமன்ற விசாரணைக்காக மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு அவர் அடிக்கடி வந்துபோக வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இதையடுத்து, தன் மனைவி தொடுத்த வழக்கை எதிர்கொள்ளவும் பொருளியல் ரீதியில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும் தேநீர்க் கடையைத் தொடங்க தீர்மானித்தார் கிருஷ்ணகுமார்.

இதற்காக, தன் மாமியார் வீட்டுக்கு எதிரே உள்ள கடையைத் தேர்வு செய்தார் என்பதுதான் இதில் திடீர் திருப்பம். மேலும், தனது கடைக்கு, ‘498 ஏ - தேநீர் நிலையம்’ எனப் பெயரிட்டுள்ளார்.

‘498 ஏ’ வரதட்சணை் கேட்டுத் துன்புறுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்ய பயன்படும் சட்டப்பிரிவாகும்.

மேலும், கடையில் இருக்கும்போதெல்லாம் தன் கையில் விலங்கு பூட்டியக் கோலத்துடன் காணப்படுகிறார் கிருஷ்ணகுமார்.

மேலும், தன் கடையின் முகப்பில், ‘எனக்கு நீதி கிடைக்கும் வரை, தேநீர் கொதிக்கும்’ என அவர் ஒரு பலகையில் எழுதியிருப்பதும் அப்பகுதி மக்களைக் கவர்ந்துள்ளது.

“என் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்தக் கடையைத் திறந்துள்ளேன்,” என்கிறார் கிருஷ்ணகுமார்.

குறிப்புச் சொற்கள்