திருவனந்தபுரம்: கேரளாவில் இருக்கும் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் உடல், மனநலனைப் பேண ஜூம்பா நடன பயிற்சி வழங்கப்படுகிறது.
அப்பயிற்சியை வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
அம்மாநிலத்தில் செயல்படும் எஸ்ஒய்எஸ், வோர்ல்டு இஸ்லாமிக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு மத அமைப்புகளும் அப்பயிற்சி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மாணவர்களின் உடல் நலனையும் மனநலனையும் மேம்படுத்துவது மட்டுமன்றி, போதைப் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவதையும் அப்பயிற்சி தடுக்கும் என அம்மாநிலக் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
“போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகப் பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்,” எனக் கேரள பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி கூறினார்.
யோகா, ஏரோபிக்ஸ், ஜும்பா உள்ளிட்டவை உடல்நலனை பேணும் பயிற்சிகள் என்றும் ஜும்பா நடன பயிற்சியின்போது மாணவ, மாணவியருக்கு சிறப்பு உடைகள் பரிந்துரை செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சிலர் உள்நோக்கத்துடன் ஜும்பா நடன பயிற்சி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்பயிற்சியை மீட்டுக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை,” என அவர் தெரிவித்தார்.