புதுடெல்லி: இந்தியாவின் டெல்லி வட்டாரத்தில் மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டின் காரணமாக அங்கு வசிப்போர் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 8.2 ஆண்டுகளை இழப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்றில் அதிக அளவு பிஎம் 2.5 இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளுக்கு ஏற்றவாறு காற்றின் தரத்தை மேம்படுத்தினால் நிலைமையை மேம்படச் செய்யலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்திக் கொள்கைக் கழகம் (எப்பிக்) அந்த அறிக்கையை வரைந்தது. இவ்வாண்டுக்கான அந்த அறிக்கை, 2023ஆம் ஆண்டு பதிவான காற்றுத் தூய்மைக்கேட்டுத் தகவல்களை ஆராய்ந்து வரையப்பட்டது.
“இது (டெல்லி காற்றின் பிஎம் 2.5 அளவு), உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டிகளில் உள்ளதில் எட்டு மடங்குக்கும் அதிகமாகும். அந்த வகையில், உலகச் சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளை நிரந்தரமாகப் பூர்த்திசெய்தால் ஒவ்வோர் இந்தியரின் வாழ்நாளையும் சராசரியாக 3.5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் டெல்லிவாசிகள்தான் இப்பிரச்சினையால் ஆக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு அடுத்தபடியாக பீகார், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகியவை காற்றுத் தூய்மைக்கேட்டால் ஆக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளைப் பூர்த்திசெய்தால் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவர்கள் சராசரியாக ஐந்தாண்டுகள் கூடுதல் காலம் வாழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் மொத்தம் 544.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை, நாட்டின் மக்கள்தொகையில் 38.9 விழுக்காடாகும்.
உலகளவில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 1.9 ஆண்டுகளை இழக்கின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

