புதுடெல்லி: காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள உமர் முகம்மதுவின் வீட்டை இந்திய பாதுகாப்புப் படையினர், வெள்ளிக்கிழமை காலையில் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்த்துத் தரைமட்டமாக்கினர்.
டெல்லி, செங்கோட்டை அருகே கடந்த 10 ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் திட்டமிட்டு நிகழ்த்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் முகமது என்பதை புலனாய்வு முகமை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், புல்வாமாவில் உள்ள டாக்டர் உமர் முகம்மதுவின் வீட்டைப் பாதுகாப்புப் படையினர் குண்டு வைத்துத் தரைமட்டமாக்கியதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீரில் அவரது வீட்டை இடித்துத் தரை மட்டமாக்கியது, இந்திய மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது.
முன்னதாக, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் சதியில் ஈடுபட்டவர்களின் வீடுகளும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து புலனாய்வு முகமையினரும் காவல்துறையினரும் நடத்திய அதிரடிச் சோதனைகளில் சுமார் 2,900 கிலோ வெடிகுண்டுத் தயாரிப்புப் பொருட்களும் துப்பாக்கிகள், அதிநவீன ஆயுதங்கள் ஆகியவை மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் மருத்துவர் உமரின் உதவியாளர்கள் முஸாம்மில், ஷாஹீன் சாயித் ஆகியோரிடம் இருந்து மீட்கப்பட்டவையாகும்.
தொடர்புடைய செய்திகள்
உமரின் உதவியாளர்களான அந்த இரண்டு மருத்துவர்களும் இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பரிதாபாத் நகரில் வெடிபொருள்களைக் குவித்ததன் பின்னணியில் உள்ள சதித்திட்டம் குறித்து அவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகள், ஜெய்ஷ்-இ-முகம்மது மற்றும் அன்சார் கஸ்வத் உல்-ஹிந்த் ஆகிய தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவர்களுடன் சேர்ந்து நாட்டின் பல இடங்களில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் டாக்டர் உமரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். அதனால் உமர் அதிர்ச்சியடைந்ததால் அந்தக் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வுத் துறை கூறியுள்ளது.
குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் மேலும் எத்தனை பேர் உள்ளனர், நன்கொடையளித்தவர்கள் யார் என பலர் பற்றியும் அறிய தேசிய புலனாய்வு முகவை மேலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

