தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வன்போலி காணொளிகளை முத்திரையிடுவது கட்டாயம்: விதிகளைக் கடுமையாக்கும் இந்திய அரசு

2 mins read
ca1fecc7-d2ac-4a90-a525-c6c2a853a185
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகளால் தீங்கு விளைவிக்கும் போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.  - சித்திரிப்புப் படம்

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் வன்போலி (deepfake) காணொளிகள், ஒலிப்பதிவு ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டும் வகையில் அவற்றை முத்திரையிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் சில திருத்தங்களையும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய, அதைப் பதிவேற்றும் பயனரிடமிருந்து சமூக ஊடகங்கள் உறுதிமொழி பெறவேண்டும்.

மேலும், அந்த உறுதிமொழியின் உண்மைத்தன்மையை தொழில்நுட்பம் மூலம் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அந்தத் தளங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அந்தக் குறியீடுகளை மாற்றவோ, மறைக்கவோ, அகற்றவோ இந்த விதிமுறைகள் தடை விதிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகளால் தீங்கு விளைவிக்கும் போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இதைத் தடுக்கவே தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வரைவு திருத்த விதிகள் குறித்து இந்திய மக்கள் நவம்பர் 6ஆம் தேதிவரை கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

பயனர் விழிப்புணர்வை ஊக்குவித்தல், போலிக்கும் உண்மைக்குமான கண்டறியும் தன்மையை மேம்படுத்துதல், பொறுப்புணர்வை உறுதி செய்தல் ஆகியவற்றை இந்தத் திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “‘வன்போலி’ போன்ற தொழில்நுட்பங்களால் சமுதாயத்துக்குத் தீங்கு ஏற்படுகிறது. அந்தத் தொழில்நுட்பத்தால் பிரபலமானவர்களின் புகைப்படம், உருவம் தவறாகப் பயன்படுத்துகின்றன. இது அவர்களின் தனிப்பட்ட வாழ்வையும் தனியுரிமையையும் பாதிக்கின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் உள்பட பல இடங்களில் வலியுறுத்தப்பட்டது. எனவே, போலிகளையும் உண்மைகளையும் பயனர்கள் தெரிந்துகொள்வதை உறுதி செய்யும் நோக்கில், இந்த வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன,” எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்