புதுடெல்லி: இந்தியா, சீனா இடையே எதிர்வரும் அக்டோபர் 26ஆம் தேதி முதல் அன்றாட விமானச் சேவை தொடங்க உள்ள நிலையில், கூடுதலாக ஒரு விமானச் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்லியில் இருந்து நவம்பர் 10ஆம் தேதி முதல் சீனாவின் குவாங்சு நகருக்கு இனி நாள்தோறும் விமானம் இயக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக, கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு முதல், இந்தியா, சீனா இடையேயான விமானச் சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவங்களுக்கு இடையே மோதல் வெடித்ததால் உறவுகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு உறவுகள் அண்மையில் சீரடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத் தலைநகர் கோல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு அக்டோபர் 26ஆம் தேதி முதல் அன்றாட விமானச் சேவைத் துவங்கும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால், திடீர் அறிவிப்பாக தற்போது டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கும் நவம்பர் 10ஆம் தேதி முதல் நாள்தோறும் விமானங்கள் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனத்தின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இந்த இரு விமானச் சேவைகளும் இரு நாட்டு குடிமக்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருதரப்பு உறவை மேம்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையேயான விமானச் சேவை மீண்டும் பொருளியல் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் வினய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.