ஆந்திரா: வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் உருவான ‘மோன்தா’ புயல், புதன்கிழமை (அக்டோபர் 29) அதிகாலை 2.30 மணியளவில் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது.
மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது.
புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கோனசீமா உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
புயலின் தாக்கத்தால் பல ராட்சத மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. மசூலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினம் அருகே கடல்நீர் ஏறக்குறைய 200 முதல் 500 அடி வரை முன்னோக்கி வந்தது.
கோனசீமா மாவட்டத்தில் 2 பெண்களும் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தனர். மேலும், பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. புயல் காரணமாக 107 ரயில்களும் 18 விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயல் பாதிப்புக்குள்ளான 7 மாவட்டங்களில் இருந்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு 1,204 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் கிட்டத்தட்ட 38 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகின. மேலும், 138,000 ஹெக்டர் பரப்பளவில் தோட்டப் பயிர்கள் நாசமாகிவிட்டன.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டதோடு, புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.3,000 இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மோன்தா, ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கரை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

