புதுடெல்லி: சீனா, துருக்கி ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட உயர்வகை துப்பாக்கிகளை இந்தியாவில் விற்பனைசெய்ய திட்டமிட்டிருந்த அனைத்துலக சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலை புதுடெல்லி காவல்துறை கைதுசெய்தது.
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய இந்தக் கும்பல், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஆயுதங்களைக் கொண்டுவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கும்பலைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகள் நால்வரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து பத்து விலையுயர்ந்த வெளிநாட்டுத் துப்பாக்கிகளையும் 92 தோட்டாக்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் குற்றக்கும்பலுக்கு அந்த ஆயுதங்களை அவர்கள் வழங்கயிருந்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
அந்தக் கடத்தல் கும்பலின்மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையையும் அந்தக் கும்பலுடன் தொடர்புடையை தனிநபர்களையும் கண்டறிய விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது டெல்லி காவல்துறை.
மேலும், கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கைப்பேசிகள், வங்கி விவரங்கள், சமூக ஊடகக் கணக்குகள் ஆகியவை குறித்தும் அந்தக் கும்பலின் மற்ற உறுப்பினர்கள் குறித்தும் இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆளில்லா வானூர்திகள் மூலம் ஆயுதங்களைப் பாகிஸ்தானிலிருந்து அக்கும்பல் கொண்டுவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
நவம்பர் 10ஆம் தேதி, புதுடெல்லியில் செங்கோட்டைக்கு அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
குண்டுவெடிப்பு நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது, அல்-கொய்தா, அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய உள்நாட்டு, நாடுகடந்த அறிவார்ந்த பயங்கரவாதக் குழுவின் சதி திட்டத்தை முறியடித்ததாக ஜம்மு- காஷ்மீர் காவல்துறை தெரிவித்தது.
அவர்களிடமிருந்து 2,900 கிலோ வெடிபொருள்களைக் காவல்துறை பறிமுதல் செய்தது.


