தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லையில் ராணுவக் கட்டமைப்பை வலுவாக்கும் சீனா: எச்சரிக்கும் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி

2 mins read
b3b23812-ef14-4f5e-ba06-26b77fa1a5c8
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இருந்து 107 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானப் படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் சீனா பெரும் வேகத்தில் தனது ராணுவ கட்டமைப்பை வலுவாக்கி வருகிறது.

திபெத் பகுதியில் சீனா மாபெரும் புதிய விமானப்படைத் தளம் அமைத்துள்ள தகவல் வெளியானதையடுத்து இருதரப்பு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அந்த விமானப் படைத்தளத்தில் 36 விமானங்கள் நிறுத்த முடியும். மேலும், புதிய கட்டடங்கள், விமான நிழற்கூரைகள் ஆகியவையும் கட்டி முடிக்கப்பட உள்ளன.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இருந்து 107 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானப் படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த செயல்பாடு, அதன் வருங்கால போர்த்திட்டங்களுக்கு ஏற்ப அமைந்திருப்பதாக இந்திய விமானப் படை முன்னாள் துணைத் தலைவர் அனில் கோஸ்லா தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைக்கு மிக அருகில் அமைக்கப்பட்டுள்ள விமானப் படைத்தளத்தின் உதவியோடு ‘டிரோன்’களால், தரை வழியாக மிகக் குறுகிய நேரத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“திபெத்தில் உள்ள விமானத் தளங்களில் வலுவூட்டப்பட்ட விமான நிலையக் கூரைகளை சீனா எப்போது கட்டத் தொடங்கியதோ, அப்போதே அது விரிவான போருக்கான அறிகுறி என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

“இதன் மூலம் அந்நாட்டின் போர் விமானங்கள் எங்கிருந்து இயக்கப்படும் என்பது தெளிவாகிறது,” என்கிறார் இந்திய விமானப்படை முன்னாள் தலைமை தளபதி பி.எஸ். தனோவா.

இதனிடையே, அண்மைய செயற்கைக் கோள் படங்களில் இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் ஏராளமான தாக்குதல் ‘டிரோன்’களை சீனா நிறுத்தி வைத்திருப்பது உறுதியாகி உள்ளது.

எனினும், இந்தியா இதுகுறித்து அச்சப்படவில்லை என்றும் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் அதிநவீன ஆளில்லா வானூர்திகள், 2029ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு சீன அச்சுறுத்தல் கட்டுக்குள் வரும் என்றும் தற்காப்பு துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்