டெல்லி காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவிக்கரம் நீட்டும் சீனா

2 mins read
1f51f515-a7df-441c-9507-1ee76c2e9fdf
காற்று மாசுபாட்டின் அளவைக் குறைக்க செயற்கை மழைத் திட்டத்தைச் செயல்படுத்த டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: காற்று மாசுபாடு அதிகரிப்பால் டெல்லி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், இதே போன்ற சிக்கல் சீனாவிலும் உருவானது என்றும் அதை திட்டமிட்டு எதிர்கொண்டு சீனா மீண்டு வந்துள்ளது என்றும் இந்தியாவுக்கான சீன துாதரகத்தின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் யு ஜிங் கூறியுள்ளார்.

சீனாவின் அனுபவத்தை இந்தியாவுடன் பகிரத் தயாராக இருப்பதாகவும் தமது ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல்வேறு சுவாசப் பிரச்சினைகள், உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.

காற்று மாசுபாட்டு அளவைக் குறைக்க செயற்கை மழைத் திட்டத்தைச் செயல்படுத்த டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. எனினும், இதுவரை இத்தகைய எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை.

குழந்தைகள் முதல் முதியோர் வரை பலர் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் டெல்லியில் உள்ள சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் யு ஜிங் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சீனா உதவத் தயார் எனக் கூறியுள்ளார்.

சீனாவில் பெய்ஜிங், சியான், டயாஞ்சின், சாங்சாய் ஆகிய நகரங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியதாகவும், எனினும் அந்தச் சிக்கலில் இருந்து மீண்டுள்ளதாகவும் திரு யு ஜிங் குறிப்பிட்டுள்ளார்.

“இப்போது எங்களால் தெளிவான நீல வானத்தைக் காண முடிகிறது. எங்களுடைய இந்த அனுபவம் அதிலிருந்து மீண்டு வருவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியாவுக்கு உதவக்கூடும்.

“டெல்லி காற்று மாசுபாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அந்த அனுபவங்களைப் பகிரத் தயார்,” என்று திரு யு ஜிங் மேலும் கூறியுள்ளார்.

நகர்ப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிப்பது, சில பகுதிகளில் தொழிற்சாலைகளை மூடுவது, பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது, தேவையற்ற புகையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளின் மூலம் சீன நகரங்கள் காற்று மாசுபாட்டை வெற்றிகரமாக குறைத்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்