காசோலை பரிவர்த்தனை: வாடிக்கையாளர் சேவையைத் துரிதப்படுத்த புதிய நடைமுறை

1 mins read
7a0978cf-0c9b-4ff9-a08c-ec8d466bfc41
மின்னணு பணப்பரிமாற்றம் போலவே இனி, சில மணி நேரத்தில் காசோலை பரிமாற்றம் மூலமும் பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. - படம்: பிடிஐ

மும்பை: காசோலையை வங்கியில் செலுத்திய சில மணி நேரத்தில், உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தற்போது வழக்கத்தில் இருக்கும் நடைமுறையின்படி, காசோலை பரிவர்த்தனை மூலம் ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைப்பதற்கு இரண்டு நாள் ஆகும்.

இந்நிலையை மாற்றவும் வாடிக்கையாளர் சேவையைத் துரிதப்படுத்தவும் இந்தப் புதிய நடைமுறையை இரு கட்டங்களாக அமல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மின்னணு பணப்பரிமாற்றம் போலவே இனி, சில மணி நேரத்தில் காசோலை பரிமாற்றம் மூலமும் பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனையை மேம்படுத்துவதுடன், தேவையற்ற தாமதத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக இவ்வாண்டு அக்டோபர் 4ஆம் தேதி, அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி என இரு கட்டங்களாக இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உதாரணமாக, காலை 10 முதல் 11 மணிவரை பெறப்படும் காசோலைக்குப் பிற்பகல் 2 மணிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். கால தாமதம் ஏற்படும் பட்சத்தில், குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தன்னிச்சையாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணம் வரவு வைக்கப்படும். காசோலையைப் பெற்றுக் கொண்ட வங்கி, வாடிக்கையாளரின் கணக்கில் ஒரு மணிநேரத்திற்குள் பணத்தை வரவு வைக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்