விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது மத்திய அரசின் ‘பாரத் டாக்சி’ செயலி

2 mins read
66679d3e-ca0a-424d-8702-f48dfc3d3fd1
அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாஹீர் ஹுசைன் அரசின் இத்திட்டத்தை வரவேற்றுள்ளார். - சித்திரிப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஒரே செயலியில் பதிவு செய்வதன் மூலம் நாடு முழுவதும் இயங்கும் வாடகைக் கார், ஆட்டோக்களின் சேவையைப் பெறும் வகையில் ‘பாரத் டாக்சி’ செயலி, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

உலகம் முழுவதும் ‘இ - ஹெய்லிங்’ எனப்படும் மின்னஞ்சல் போன்ற கைப்பேசி செயலி மூலம் வாடகை வாகனங்களின் சேவையைப் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ரேபிடோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இச்சேவையை அளித்து வருகின்றன.

இந்நிலையில், சில நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் கட்டண விதிப்பில் சீரான நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என சில தரப்பினர் புகார் எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, நாடு முழுதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில், பொதுமக்கள் பயணிக்க வசதியாக, ‘பாரத் டாக்சி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சில பகுதிகளில் சோதனை முறையில் இந்தச் செயலி அறிமுகமாகி உள்ளதாகத் தெரிகிறது. ஓரிரு வாரங்களில் தலைநகரம் புதுடெல்லியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும் அதன் பின்னர் படிப்படியாக மற்ற நகரங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாஹீர் ஹுசைன், அரசின் இத்திட்டத்தை வரவேற்றுள்ளார்.

“பாரத் டாக்சி செயலியின் தேவை தமிழகத்துக்குத்தான் அதிகம் உள்ளது. எனவே, டெல்லியில் அறிமுகம் செய்யும்போதே, சென்னையிலும் அதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்