ஆசிரியரின் தண்டனையால் மாணவி பலி

1 mins read
6539ff66-53e5-427d-942c-2385efe5202f
மாணவி காஜல் படித்த பள்ளி. - படம்: இந்திய ஊடகம்

மகாரா‌‌ஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் உள்ள வசாய் பள்ளிக்குச் சற்று தாமதமாக வந்த 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி காஜலை அவரது ஆசிரியர், புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம் போட வைத்ததால், காஜல் உடல்நலம் பாதிக்கப்பட்டு துரதிர்ஷ்டவசமாகப் பலியானார்.

பால்கரின் வசாயில் உள்ள பள்ளிக்குச் சில நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவி காஜலுக்கும் மற்ற பல மாணவர்களுக்கும் தண்டனையாக, புத்தகப் பையுடன் 100 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி ஆசிரியர் உத்தரவிட்டார்.

மாணவர்கள் தோப்புக்கரணம் போட்ட பிறகு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை வீடு திரும்பிய காஜலுக்கு முதுகு வலி ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது.

குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் காஜலை அழைத்துச் சென்றனர். முதுகு வலி தொடர்ந்தால் மும்பையில் உள்ள ஜே.ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்குச் சிகிச்சை பலனின்றி மாணவி பலியானார்.

காஜலுக்கு ஆஸ்துமா இருந்ததாகவும் புத்தகப் பையின் கூடுதல் எடையுடன் தோப்புக்கரணம் போட்டதால் உடலுக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டு மாணவி பலியானதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதோடு வகுப்பறைக்குத் தமது மகள் 2 அல்லது 3 நிமிடங்கள்தான் தாமதமாக வந்திருக்கக்கூடும் என்று தாயார் ஷீலா கவுட் தெரிவித்தார்.

சர் ஜே.ஜே. மார்க் காவல் நிலையத்தில் ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது வாலிவ் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்