புதுடெல்லி: கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போர் குடும்பத்தினருக்கு, காப்புறுதி நிறுவனங்கள் இழப்பீடு வழங்கத் தேவையில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவின் மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ரவிஷா. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 18ல் தன் கிராமத்தில் இருந்து அரசிகரே நகருக்கு காரில் சென்றார். உடன் பெற்றோர், சகோதரி மற்றும் குழந்தைகளும் அவருடன் பயணம் செய்தனர்.
திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ரவிஷாவின் மரணத்துக்கு மூன்றாம் தரப்பு இழப்பீடு தொகையாக 80 லட்சம் ரூபாய் கோரி அவர் மனைவி, மகன் மற்றும் பெற்றோர் அரசிகரேயில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்தனர்.
இந்த விண்ணப்பம் தொடர்பாக தீர்ப்பாயம், ‘அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனத்தை ஓட்டி விபத்து நிகழ காரை ஓட்டியவரே காரணமாக இருந்துள்ளார். எனவே அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் இழப்பீடு பெறும் உரிமை இல்லை’ என்று கூறி தீர்ப்பாயம் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உயிரிழந்த ரவிஷாவின் குடும்பத்தினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
விசாரணையில், ரவிஷா ஓட்டிச்சென்ற கார் அவருடையது இல்லை. அதைக் கடனாக வாங்கிச் சென்றார். எனவே, காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையை மறுக்கக் கூடாது’ என்று வாதம் செய்தது.
இதை கர்நாடக உயர் நீதிமன்றம், ஏற்க மறுத்தது.
தொடர்புடைய செய்திகள்
எனவே, வாகன உரிமையாளர் அல்லது வாகனத்தை கடனாக வாங்கியவரின் அலட்சியம் காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது காயங்களுக்கு காப்புறுதி நிறுவனத்தை பொறுப்பேற்க வைக்க முடியாது என்று கூறி விபத்து இழப்பீடுக்கான தீர்ப்பாய உத்தரவை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், ரவிஷாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் மகாதேவன் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வாதங்ககைக் கேட்ட நீதிபதிகள், ‘இறந்தவர் அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது என்று காவல்துறையின் குற்றப்பத்திரிகை தெளிவாகக் கூறுகிறது.
எனவே அவரது வாரிசுகள் இழப்பீடு கோர உரிமையற்றவர்கள். காப்புறுதி நிறுவனமும் இத்தகைய இறப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. உயர் நீதிமன்ற முடிவில் தலையிடுவதற்கு தகுந்த காரணம் எதுவும் இந்த வழக்கில் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.