புதுடெல்லி: கனடாவில் உயர்கல்வி பயில விசாவுக்காக விண்ணப்பித்திருந்த இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களில் நான்கில் மூன்று பங்கு அந்நாடு நிராகரிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு 32 விழுக்காடாக இருந்த அந்த எண்ணிக்கை இவ்வாண்டு 74 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கனடாவில் படிக்கும் அயலக மாணவர்களில் 40 விழுக்காட்டினர் இந்திய நாட்டினர். கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 1.88 லட்சம் மாணவர்கள் அந்நாட்டிற்குக் கல்வி பயிலச் சென்றனர்.
இது, அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் இருமடங்கு அதிகம்.
இருநாடுகளுக்கும் இடையே நிலவிவரும் பூசலே மாணவர்களின் விசா நிராகரிப்புக்குக் காரணமாகக் கூறப்பட்டாலும், தற்போது கனடா எதிர்கொண்டுவரும் வீடுகள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதி குறைபாடு, உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அந்நாட்டில் வலுக்கும் குரல்கள் ஆகியவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
நிராகரிப்பு விழுக்காடு அதிகரித்திருந்தாலும், கல்வி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெரும் சரிவைக் கண்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 20,900 ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு 4,515 ஆகக் குறைந்துள்ளது.

