கொச்சி: புதிய வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சியாகத் தொடங்க வேண்டிய நாள் அச்சத்திலும் குழப்பத்திலும் முடிந்தது. ஆனாலும், காதல் அடிபணியவில்லை.
திருமணம் நடக்கவிருந்த நாளின் அதிகாலையில் நேர்ந்த விபத்தால் முதுகில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மணப்பெண் அவனி ஜெகதீஷ். இதனையடுத்து, மண்டபத்தில் நடக்கவிருந்த திருமணம், கண்காணிப்புத் திரைகள், தூக்குப் படுக்கைகள் சுற்றியிருக்க, நெருக்கமானவர்களின் வேண்டுதல்களுடன் மருத்துவமனையில் அவருக்குத் தாலி கட்டினார் மணமகன் வி.எம். ஷாரன்.
இந்தியாவின் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) இச்சம்பவம் அரங்கேறியது.
பள்ளி ஆசிரியையான அவனிக்கும் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் ஷாரனுக்கும் ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திருமணம் நடப்பதாக இருந்தது.
அன்றைய நாள் அதிகாலை 3 மணியளவில் ஒப்பனை செய்வதற்காக தம் உறவினர் இருவருடன் அழகுநிலையத்திற்குச் சென்றார் அவனி. அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தின்மீது மோதி விபத்திற்குள்ளானது என்று இன்னோர் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
காரிலிருந்த மூவரையும் உள்ளூர்வாசிகள் மீட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மூவரும் கடுமையாகக் காயமடைந்ததாகச் சொல்லப்பட்டது. முதுகில் கடுமையாகக் காயமுற்ற அவனி, பின்னர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தகவலறிந்ததும் மணமகன் ஷாரனும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். 12.15 - 12.30க்குள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்டவாறே அதனை நடத்த இரு குடும்பத்தினரும் முடிவுசெய்தனர்.
அதுபற்றி, மருத்துவமனை நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுக்க, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்தபின் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவிலேயே அவனிக்குத் தாலி கட்டினார் ஷாரன்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் இருவரும் வெகுநாள்களாகக் காதலித்து வந்தோம். நாங்கள் திருமணம் செய்துகொள்ள இரு வீட்டினரும் சம்மதித்தனர். எங்கள் வாழ்வில் சிறப்பானதாக அமைய வேண்டிய நாளில் விபத்து நேர்ந்துவிட்டது. ஆனாலும், திருமணம் தடைபடக்கூடாது என முடிவுசெய்தோம். எங்கள் விருப்பம் நிறைவேற மருத்துவமனை நிர்வாகிகளும் ஒத்துழைத்தனர். விரைவில் அவர் உடல்நிலம் தேறி இயல்புநிலைக்குத் திரும்புவார் என நம்புகிறோம்,” என்று ஷாரன் கூறினார்.
அவனிக்கு விரைவில் முதுகில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகவும் அவர் சீரான உடல்நிலையுடன் இருப்பதாகவும் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

