பீகார் தேர்தல் முடிவுகள் வியப்பு அளிக்கிறது: ராகுல்

2 mins read
1e27a2ae-2978-4db1-9e5d-21a09e3bb77d
பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. - படங்கள்: ஊடகம்

புதுடெல்லி: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் தமக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் வியப்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இம்முறை பீகார் தேர்தலை ‘மகாகத்பந்தன்’ என்ற கூட்டணியை அமைத்து எதிர்கொண்டது காங்கிரஸ் கட்சி. பாஜக கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படுதோல்வி கண்டுள்ளது ‘மகாகத்பந்தன்’ கூட்டணி.

இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து முதல் முறையாக எக்ஸ் ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

அதில், ‘மகாகத்பந்தன்’ கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகார் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பீகாரில் கிடைத்துள்ள இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. தொடக்கம் முதலே நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் எங்களால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்தப் போர் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கானது,” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் ‘இண்டியா’ கூட்டணியும் இந்தத் தேர்தல் முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்யும் என்றும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் மதிப்பதாகக் கூறியுள்ளார். கட்சித் தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் என்றும் அரசியலமைப்பு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயலும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பீகாரைப் போல் தமிழகத்திலும் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மக்கள் ஒரு பெரிய வெற்றியை உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“இது மகத்தான வெற்றி. அசைக்க முடியாத நம்பிக்கை. காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் மீது நேர்மறையான பார்வை இல்லை.

“உண்மை என்னவென்றால், இன்று காங்கிரஸ் முஸ்லீம்-லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் ஆகிவிட்டது. அக்கட்சியின் செயல்பாடு இப்படித்தான் அமைந்துள்ளது.

“எனவே, எதிர்மறை அரசியலால் சங்கடப்படும் ஒரு புதிய பிரிவு காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகி வருகிறது,” என்று திரு மோடி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் எடுக்கும் பாதை குறித்து கட்சிக்குள் ஆழ்ந்த ஏமாற்றமும் வெறுப்பும் உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சூழல் அக்கட்சியில் மற்றொரு பெரிய பிளவை விரைவில் ஏற்படுத்தும் எனத் தாம் அஞ்சுவதாகக் கூறியுள்ளார்.

“பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று தமிழகத்திலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். பீகார் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் எதிரொலிக்கும்,” என்றார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்