பாட்னா: பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிர ஜனதா தள கட்சியின் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இண்டியா கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இதனை அறிவித்தார்.
தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கூடுதல் இடம் கேட்டு அழுத்தம் கொடுத்த விகாஷீல் இன்சான் கட்சித் (விஐபி) தலைவர் முகேஷ் சஹானி, துணை முதலமைச்சர் வேட்பாளராகக் களம் காண்கிறார்.
இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவுக்குச் சில வாரம் மட்டுமே இருக்கும் சூழலில் இப்போதுதான் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
74 வயதாகும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள 35 வயது தேஜஸ்வி, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன்.
இப்போது அம்மாநிலச் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இவர், நிதிஷ் குமாருடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது, பீகாரின் துணை முதலமைச்சராக இருந்தவர்.
2015ஆம் ஆண்டு முதன்முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் தேஜஸ்வி. 2020ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். லாலு பிரசாத் மீதான ஊழல் வழக்குகளில் தேஜஸ்வியும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் அவர் தலைவராக இருக்கும் ஆர்ஜேடி கட்சி சற்று பின்னடைவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.
கிரிக்கெட் விளையாட்டாளருமான தேஜஸ்வி டில்லி டேர்டெவில்ஸ், ஜார்க்கண்ட் மாநில அணிகளுக்காக விளையாடியுள்ளார். பீகாரில் வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ ), இண்டியா கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இண்டியா கூட்டணி சார்பில் (ஆர்ஜேடி) 143 தொகுதிகளிலும் காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகள் இதர கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. இன்னும் 12 தொகுதிகளில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

