பீகார் தேர்தல்: அசம்பாவிதமின்றி நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவு

2 mins read
e6984c41-da6c-4aee-9e6e-5c7b9365d879
பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களுக்காக ஐந்து மாவட்டங்களில் மட்டும் 56 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்குள் முடிவடைந்தது. - படம்: ஊடகம்

பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (நவம்பர் 6) நடைபெற்றது.

அங்குள்ள 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பாட்னா, வைஷாலி, நாளந்தா, போஜ்பூர், முங்கர், சரண், சிவான், பெகுசராய், லக்கிசராய், கோபால்கஞ்ச், முசாபர்பூர், தர்பங்கா, மாதேபுரா, சஹர்சா உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.

அதேசமயம், பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களுக்காக ஐந்து மாவட்டங்களில் மட்டும் 56 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்குள் முடிவடைந்தது.

இந்த முதற்கட்டத் தேர்தலில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களமிறங்கினர். இவர்களில் 122 பெண் வேட்பாளர்கள் அடங்குவர்.

ஏறக்குறைய 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

வியாழக்கிழமை காலை முதல் தேர்தல் நடைபெற்ற 121 தொகுதிகளில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

மதியம் 1 மணி நேர நிலவரப்படி, 42.31% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கைப் பதிவு செய்தார். பீகார் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ், பாட்னா சாஹிப் தொகுதியில் வாக்களித்தார்.

தேர்தலையொட்டி பீகார் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் பாட்னாவில் இணை ஆணையர் அனு குமாரி தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பெரிய அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்றாலும், எதிர்க்கட்சிக் கூட்டணிகள் பலமாக உள்ள பகுதிகளில் வேண்டும் என்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றஞ்சாட்டியது.

மேலும், வாக்குப்பதிவு மந்தமாக நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே வாக்குப்பதிவு விகிதத்தைக் குறைத்துச் சொல்வதாகவும் அக்கட்சி சாடியது.

எனினும், இரு குற்றச்சாட்டுகளும் தவறானவை எனத் தேர்தல் ஆணையம் உடனுக்குடன் விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, பீகார் துணை முதல்வரும் லக்கிசாராய் தொகுதி பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா அத்தொகுதியில் தனது வாக்கைப் போட்டார்.

அதன் பின்னர் மற்ற இடங்களில் வாக்குப்பதிவைப் பார்வையிட அவர் காரில் சென்றபோது, சிலர் கும்பலாக வந்து வழிமறித்தனர். பின்னர் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், சிலர் கற்கள், காலணிகளைக் காரை நோக்கி வீசினர்.

இதையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். எனினும், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதாகத் தெரிகிறது.

இத்தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றுள்ள பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராகக் கொண்ட மகபந்தன் (இண்டியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்