பெங்களூரு: பெங்களூருவில் வங்கிப் பணத்தை ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 54 மணி நேரத்திற்குள் துரிதமாகச் செயல்பட்ட தனிப்படை காவலர்கள், கான்ஸ்டபிள் காவலர் ஒருவர் உட்பட ஆறு பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.6.29 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம்
கொள்ளையர்கள் அனைவரும் கைப்பேசி அழைப்புகளைத் தவிர்த்து, ‘வாட்ஸ்-அப்’ மூலமாகவே ஒருவருக்கொருவர் பேசி வந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பதிவான கைப்பேசி கோபுரத்தின் சமிக்ஞையை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட மூவரின் எண்கள் அங்கிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு காவலர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
200 காவலர்கள் 5 மாநிலங்களில் தேடுதல் வேட்டை
சித்தாத்புரா காவலர்கள் வழக்குப் பதிவு செய்த நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட காவலர்கள் களமிறக்கப்பட்டனர்.
கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கடும் விசாரணை, தொழில்நுட்ப உதவியுடன் 54 மணி நேரத்தில் முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, பெரும்பான்மையான பணம் மீட்கப்பட்டுள்ளதாகப் பெங்களூரு காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சம்பவத்தின் பின்னணி
கடந்த 19ஆம் தேதி, பெங்களூரு ஜே.பி.நகர் எச்டிஎஃப்சி வங்கிக் கிளையிலிருந்து ஏடிஎம்களில் நிரப்புவதற்காக ரூ.7.11 கோடி பணத்துடன் ‘சிஎம்எஸ்’ நிறுவன வேன் ஜெயநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அசோகா தூண் அருகே சென்றபோது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் வேடமணிந்து வந்த கும்பல், வாகனத்தை வழிமறித்து 4 பெட்டிகளில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.
கைது செய்யப்பட்ட அன்னப்பா, கோபால் பிரசாத், சேவியர் ஆகிய மூவரும் இந்தத் கொள்ளைச் சம்பவத்திற்கான முக்கியச் சூத்திரதாரிகள் ஆவர். இவர்கள் கடந்த 3 மாதங்களாகக் கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்டுள்ளனர்.
ஜே.பி.நகர் முதல் ஜெயநகர் வரையிலான வழியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களைத் துல்லியமாகத் தேர்வு செய்து இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

