புதுடெல்லி: வங்கியிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பெல்ஜிய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை புதுடெல்லி செய்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெகுல் சோக்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்ற அவரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதனிடையே, மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெல்ஜியம், இந்தியா இடையேயான அரசதந்திர உறவுகளின் அடிப்படையில், அந்நாட்டில் மெகுல் சோக்சி கைதுசெய்யப்பட்டது சட்டப்படி செல்லுபடியாகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை, சோக்சி இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டால், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அவருக்கான அறை காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையைச் சேர்ந்த மெகுல் சோக்சியும் அவரது உறவினர் நீரவ் மோடியும் இணைந்து வைர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பல்வேறு காரணங்களை முன்வைத்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையிலிருந்து ஏறக்குறைய ரூ.13,000 கோடி கடன் பெற்ற இருவரும் அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதுதொடர்பாக, வங்கித் தரப்பில் பலமுறை விளக்கம் கேட்ட போதும் எதுவும் கூறாமல் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர்.
எனினும், அடுத்த ஆண்டிலேயே நீரவ் மோடி லண்டனில் கைதானார்.
ஆனால், மெகுல் சோக்சி முதலில் அமெரிக்கா சென்று, பின்னர் அங்கிருந்து தீவு நாடான ஆன்டிகுவாவுக்குச் சென்று குடியேறினார். அவர் அங்கு குடியுரிமை பெற்றுள்ளார் எனக் கூறப்பட்டது.