தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலைக்குத் திரும்புமாறு பங்ளாதே‌ஷ் வரித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

1 mins read
6e606246-d058-46db-bac8-d94dc383c73a
டாக்டர் முகம்மது யுனுசின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பங்ளாதே‌ஷில் செயல்பட்டுவருகிறது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: தேசிய அளவிலான இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்திக்கொண்டு உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு பங்ளாதே‌ஷ் அரசாங்கம், வரித்துறை, குடிநுழைவு அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) உத்தரவிட்டது.

வரித்துறை, குடிநுழைவு அதிகாரிகளின் வேலை நிறத்தப் போராட்டத்தினால் பங்ளாதே‌ஷின் வரி தொடர்பான செயல்பாடுகள் முடங்கிப்போயிருக்கின்றன. முக்கிய வர்த்தக மையமான சிட்டகோங் துறைமுகத்தின் குடிநுழைவு நடைமுறைகளும் அவற்றில் அடங்கும்.

“அதிகாரிகளும் ஊழியர்களும் உடனடியாக வேலைக்குத் திரும்பவேண்டும், தேசிய நலன்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் மக்களையும் நாட்டின் பொருளியலையும் பாதுகாப்பதற்காகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசாங்கம் தள்ளப்படும்,” என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. கடும் நடவடிக்கைகள் குறித்த மேல்விவரங்கள் ஏதும் அறிக்கையில் இடம்பெறவில்லை.

பொருளியலைப் பாதுகாக்க ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று டாக்டர் முகம்மது யூனுஸ் தலைமையிலான பங்ளாதே‌ஷ் இடைக்கால அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேசிய வருவாய் ஆணையத்தில் (என்பிஆர்) இடம்பெறும் எல்லா வேலைகளும் முக்கியமானவை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

பங்ளாதே‌ஷின் தேசிய வருவாய் ஆணையம் கலைக்கப்பட்டு புதிய வருவாய்த் துறைப் பிரிவுகள் உருவாக்கப்படும் என கடந்த மே மாதம் 12ஆம் தேதி அரசாங்கம் அறிவித்த பிறகு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

குறிப்புச் சொற்கள்