சென்னை: சமூக ஊடகங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயரையும் புகைப்படத்தையும் வர்த்தக ரீதியில் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தென்னிந்தியத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இசைஞானி இளையராஜா சுமார் 1,000 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே, இசை காப்புரிமை தொடர்பாக அவர் வழக்கு தொடுத்துள்ள நிலையில், தன்னை அடையாளப்படுத்தும் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப்பெயர், குரல் உள்ளிட்ட எதையும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மற்றொரு வழக்கும் அவர் தொடுத்துள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட தன்னுடைய புகைப்படங்களை நீக்க வேண்டும் என்றும் அனுமதியின்றி தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விபரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

