சென்னை: சென்னை துப்புரவுப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர்.
பேரணி முடிவில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.
இதைத்தொடர்ந்து முதல்வரின் முகாம் அலுவலகத்துக்கு சென்ற தூய்மை பணியாளர்கள் முதல்வருக்கு நேரில் நன்றி கூறினர். இந்தச் சந்திப்பின் போது அமைச்ச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதால் கைது செய்யப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகத் தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 950 பேர் விடுதலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) இரவு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான துப்பரவுப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்தும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் துப்பரவுப் பணியாளர்கள் 13 நாள்களாக ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் மேற்கொண்டனர்.
இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாகப் போராட்டம் நடத்தி வரும் துப்புரவுப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து, போராட்டம் நடத்திய துப்பரவுப் பணியாளர்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறை புதன்கிழமை மாலை அறிவுறுத்தியது. மேலும், நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி கலைந்து செல்லும்படி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் போராட்டக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்கினார்கள். அப்போது காவல்துறையினருடன் துப்புரவுப் பணியாளர்கள் வாக்குவாதம் செய்தனர். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள் உட்பட ஏறத்தாழ 950 பேரைக் கைது செய்து 30 மாநகர அரசு பேருந்துகள் மூலம் சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி, தாம்பரம் உட்பட 12 மண்டபம் மற்றும் சமூக நலக்கூடங்களுக்கு காவல்துறையினர் கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.
செல்லும் வழியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

