புதுடெல்லி: இந்திய குடிமக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை அதிக அளவில் வாங்கி தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், உள்நாட்டில் உருவான ‘ஸோஹோ மெயில்’ மின்னஞ்சல் (Zoho Mail) சேவைக்கு தாம் மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அவர் தமது புதிய மின்னஞ்சல் முகவரியை தமது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அமித்ஷாவின் இந்த நடவடிக்கை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், “அனைவருக்கும் வணக்கம். நான் ‘ஸோஹோ மெயி’லுக்கு மாறிவிட்டேன். என்னுடைய புதிய மின்னஞ்சல் முகவரியைக் குறித்துக் கொள்ளுங்கள். வருங்காலத்தில் எனக்கு மின்னஞ்சல் அனுப்ப இந்த முகவரியைப் பயன்படுத்தவும்,” என்று அமித்ஷா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவானது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைப்பிடிக்கும் நடைமுறையை நினைவுபடுத்துவதாக உள்ளது எனப் பலரும் கூறியுள்ளனர். அப்பதிவின் முடிவில், “இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்தியதற்காக நன்றி,” என்று அமித்ஷா குறிப்பிட்டிருப்பது அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.
‘ஸோஹோ’ மின்னஞ்சல் சேவை கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமானது. தற்போது பிரபலமாக உள்ளது கூகல் மின்னஞ்சலுக்கு மாற்றாக ‘ஸோஹோ மெயில்’ கருதப்படுகிறது.
மேலும், ஸோஹோ நிறுவனம் இந்தியர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் ‘அரட்டை’ (Chatting) என்ற செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தச் செயலி, ‘வாட்ஸ் அப்’புக்கு மாற்றாக அமையும் என்று கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய பொருள்களுக்கு 50% வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அந்நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
‘ஸோஹோ’ மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்த அமித்ஷா முன்வந்திருப்பதையும் அத்தகைய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.