புதுடெல்லி: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குண்டர் கும்பல் தலைவர்களில் ஒருவரான அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் புதன்கிழமை (நவம்பர் 19) மதியம் டெல்லி வந்தடைந்தனர்.
பிரபல குண்டர் கும்பல் தலைவரான லாரன்ஸ் பிஷ்னோய் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது சகோதரர்தான் அன்மோல். இவர், வெளிநாட்டிலிருந்து செயல்படும் குண்டர் கும்பலின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.
அன்மோல் பிஷ்னோய் மீது மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு, நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அவர் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்திய தேசிய புலனாய்வு முகவையின் தேடப்படுவோர் பட்டியலில் இவரது பெயரும் இருந்தது. அன்மோல் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அன்மோல் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் அடிக்கடி கனடா சென்று திரும்பியது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு அன்மோல் அமெரிக்க காவல்துறையால் கலிஃபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்க அவரது கணுக்காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.
இந்தியா ஜனவரி 2024 இல் அன்மோலை நாடு கடத்தக் கோரியிருந்தது. அன்மோல் அமெரிக்க அதிகாரிகளிடம் தஞ்சம் கோரினார், ஆனால் அவரது மனுவை லூசியானா நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டது. அதன்படி, அவர்களைச் சுமந்து வந்த விமானம், நவம்பர் 19ஆம் தேதி டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, அன்மோல் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பே அவரைக் கைது செய்ய வேண்டும் எனப் படுகொலை செய்யப்பட்ட பாபா சித்திக் மகனும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான ஜீஷன் சித்திக் மகாராஷ்டிர அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அன்மோல் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

