சாலையில் தீப்பிடித்த ஆம்புலன்ஸ்; பச்சிளம் குழந்தை உட்பட நால்வர் உடல் கருகி உயிரிழப்பு

1 mins read
83056072-f6f3-4be6-a3b1-33b5849e9ab2
தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ். - படங்கள்: இந்திய ஊடகம்

அகமதாபாத்: மேல் சிகிச்சைக்காக பிறந்து ஒருநாளே ஆன குழந்தையை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், பச்சிளம் குழந்தை உட்பட நால்வர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மோடசாவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிறந்த ஒரு நாள் குழந்தையை உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகச் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

மோடசா-தன்சுரா சாலையில் ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வாகனத்தின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார்.

அதற்குள் ஆம்புலன்ஸின் முன்புறத்தில் அமர்ந்திருந்த ஓட்டுநரும் குழந்தையின் உறவினர்களும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால், ஆம்புலன்ஸின் பின்புறத்தில் குழந்தையுடன் இருந்த குழந்தையின் தந்தை ஜிக்னேஷ் மோச்சி, 38, மருத்துவர் சாந்திலால் ரெண்டியா, 30, தாதி பூரிபென் மனாட், 23, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து ஆம்புலன்ஸில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கோர விபத்துக்கான சரியான காரணம் என்னவென்பதைக் கண்டறிய தடயவியல் நிபுணர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்