சீனாவின் சின்ஜியாங் ஆகாயப் பகுதியைப் பயன்படுத்த ஏர் இந்தியா வேண்டுகோள்

2 mins read
37680f50-f5e4-4b2f-919d-fcef3f171b22
ஏர் இந்தியா விமான நிறுவனம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: சீனா, அதன் சின்ஜியாங் பகுதிக்கு மேல் உள்ள ராணுவ ஆகாயப் பகுதியைப் பயன்படுத்தத் தங்களுக்கு அனுமதி வழங்குமாறு ஏர் இந்தியா விமான நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவைத் தங்களுக்கு அனுமதி வழங்க வைக்குமாறு ஏர் இந்தியா, இந்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது. பயணப் பாதைகளின் தூரத்தைக் குறைப்பதற்காக ஏர் இந்தியா இந்நடவடிக்கையை எடுக்கிறது.

பாகிஸ்தானிய ஆகாயப் பகுதி வழியாகச் செல்ல இந்திய விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் இந்த வேண்டுகோளை முன்வைத்தது அதன் ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்புதான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. இமய மலை வட்டாரத்தில் அமைந்துள்ள எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு இந்தியா-சீனா நேரடி விமானப் பயணங்கள் இடம்பெறாமல் இருந்தன.

இந்நிலையில், ஏர் இந்தியாவின் இந்த வேண்டுகோள் விநோதமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியாவின் 25.1 விழுக்காட்டுப் பங்குகளுக்கு உரிமை வகிக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் விஸ்தாரா விமான நிறுவனத்துடன் இணைந்ததைத் தொடர்ந்து இந்நிலை உருவானது.

ஏர் இந்தியாவின் எஞ்சிய பங்குகள் அந்நாட்டின் மாபெரும் நிறுவனமான டாட்டா சன்சுக்குச் சொந்தமானவை.

ஏர் இந்தியாவின் நிதி நெருக்கடிகளால் சிங்கப்பூர் ஏர்லைன்சின் வருவாய், ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் 82.1 விழுக்காடு சரிந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்சின் செயல்பாட்டு லாபம் 22.4 விழுக்காடு அதிகரித்தபோதும் இந்தச் சூழல் உருவானது.

கடந்த ஜூன் மாதம் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் 787 டிரீம்லைனர் வகை விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனம் அதன் பெயரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்தில் 260 பேர் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்