வெடிகுண்டுப் புரளியால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

1 mins read
53d5f347-2513-4c5d-bccf-bf87430c887c
ஏர் இந்தியா விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். - படம்: என்டிடிவி

லக்னோ: மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமொன்று, வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டுப் புரளிச் சம்பவம், புதன்கிழமை (நவம்பர் 12) பிற்பகல் 1.30 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்ட ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐஎக்ஸ் 1023’ நடுவானில் இருந்தபோது நடந்தது.

வாரணாசியின் லால் பகதூர் ‌சாஸ்திரி அனைத்துலக விமான நிலையத்தில் பிற்பகல் மணி 3.50க்கு அவசரமாக அது தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 176 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழு உடனடியாகச் செயல்படுத்தப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

“அனைத்துப் பாதுகாப்பு நடைமுறைகளும் முடுக்கிவிடப்பட்டன. விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்புச் சோதனைகள் அனைத்தும் நிறைவுற்ற பிறகு, விமானம் மீண்டும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்,” என்று அவர் சொன்னார்.

இவ்வேளையில், டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பெரிய விமான நிலையங்களும் வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்த மின்னஞ்சல்களைப் பெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன. இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புதன்கிழமை பிற்பகல் சுமார் 3.45 மணிக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைப்புகள், முன்னெச்சரிக்கைச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

பின்னர் அந்த மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்பது உறுதிசெய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்