புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தில் இருந்து இந்திய மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை.
இத்தகைய சூழலில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சரக்குகளை கையாளும் பிரிவைச் ((AISATS) சேர்ந்த ஊழியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் நான்கு பேரை ஏர் இந்தியா நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்தக் கொண்டாட்டம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் வேதனையை அதிகப்படுத்தி உள்ளது.
இது என்ன கொண்டாட்டம், எப்போது எடுக்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் தெரியாவிட்டாலும், விமான விபத்து நிகழ்ந்த ஜூன் 12ஆம் தேதிக்கு பிறகுதான் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
ஊழியர்களின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனமும் தன் பங்குக்கு வருத்தம் தெரிவித்ததுடன், நான்கு மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அண்மையில் வெளியான காணொளிக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக ஏர் இந்தியா விமான சரக்குகளைக் கையாளும் நிறுவனம் கூறியுள்ளது.
“இந்த நடத்தை எங்களை மதிப்பிடாது. இதில், தொடர்புடையவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுதாபம், பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.