சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஒன்பது நகரங்களுக்கான சேவைகளை திடீரென நிறுத்தியிருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களில் ஜெய்ப்பூர், புவனேஷ்வர், கோவா, அந்தமான் உள்ளிட்ட ஒன்பது நகரங்களுக்கு புதிய விமானச் சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியிருந்தது.
பொதுவாக விமான நிறுவனங்கள் கோடை மற்றும் குளிர்கால அட்டவணைப்படி, ‘ஸ்லாட்கள்’ பெற்று விமானங்களை இயக்கும். இது தொடர்பான தகவல்கள் ஆணையம் சார்பில் வெளியிடப்படும்.
இந்த நிலையில், புதிதாக துவங்கிய ஒன்பது நகரங்களுக்கான சேவைகளை அது, முன்னறிவிப்பின்றி நிறுத்தியதாக தினமலர் தகவல் தெரிவிக்கிறது.
ஏற்கெனவே, பல்வேறு சேவைகள் பறிக்கப்பட்டு, சென்னை விமான நிலையம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள சூழலில், திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய சேவையில் எதிர்பார்த்த அளவில் வருவாய் கிடைக்காததால் இந்த முடிவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “விமான இயக்கங்கள் வலையமைப்பை மேம்படுத்தும் வகையில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படுவதால் ஒன்பது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
புதிய சேவைகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.