சண்டிகர்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, ஆஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிவிட்டார்.
அவரைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பஞ்சாப் காவல்துறை கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய தனியார் இணையத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தன் மீதான பாலியல் வழக்கில் பிணை கிடைத்தால் மட்டுமே நாடு திரும்பப் போவதாக ஹர்மீத்மஜ்ரா திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் சனூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான இவர், ஜிர்காபூரைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்ததாகப் புகார் எழுந்தது. தனக்கு ஏற்கெனவே திருமணமானதை ஹர்மீத் சிங் மறைத்துவிட்டார் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார் அந்தப் பெண்.
அதன் பிறகு ஹர்மீத் சிங் தனக்கு ஆபாச குறுந்தகவல், காணொளி ஆகியவற்றைத் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் ஒரு கட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் தமது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனால் அவர் தலைமறைவானார்.
இந்நிலையில், அவர் தனது உறவினர் வீட்டில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அங்கு சென்றனர். ஆனால், தன் ஆதரவாளர்களை ஏவி காவல்துறையை நோக்கி கல்வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்திய ஹர்மீத் சிங் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் அளித்த ஒரு பேட்டியில், தனக்கு எதிராக அரசியல் சதி அரங்கேற்றப்பட்டதாகக் கூறியுள்ளார் ஹர்மீத் சிங்.
தொடர்புடைய செய்திகள்
பஞ்சாப் மக்களுக்காகத் தாம் குரல் கொடுப்பதைத் தடுக்கவே பாலியல் வழக்குப் போடப்பட்டுள்ளது என்றும் தம்மை என்கவுன்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

