தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

972 பேரைக் கொல்ல பிஎஃப்ஐ சதி: என்ஐஏ அறிக்கை

2 mins read
13dcca26-51ec-415d-8afb-f18c7bcff13d
கடந்த 2022 செப்டம்பரில், மதுரையில் உள்ள ‘பிஎஃப்ஐ’ நிர்வாகியின் வீட்டில் ‘என்ஐஏ’ சோதனை நடத்தியது. - கோப்புப்படம்: ஊடகம்

கொச்சி: இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா’ (பிஎஃப்ஐ) அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஓய்வுபெற்ற நீதிபதி உட்பட 972 பேரைப் படுகொலை செய்ய திட்டம் தீட்டியதாக தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை ஒன்றை ‘என்ஐஏ’ தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு, கேரள மாநிலம் பாலக்காட்டில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சீனிவாசன் அடையாளம் தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து ‘என்ஐஏ’ மேற்கொண்ட விசாரணையில், ‘பிஎஃப்ஐ’ அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் திட்டமிட்டுக் கொலை செய்தனர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக 15 பேர் கைதாகினர்.

சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது, கைதான 15 பேரும் பிணை கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

ஆனால், என்ஐஏ தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், பிஎஃப்ஐ குறித்து விரிவான அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், செய்தியாளர்கள் குழு, ஆயுதப் பயிற்சி குழு, சேவைக் குழு என மூன்று பிரிவுகளாக இந்த அமைப்பு இயங்கி வருவதாகவும் செய்தியாளர்கள் குழு, சமூகத்தில் பிரபலமானவர்களின் பட்டியலைச் சேகரித்து, ஒவ்வொரு மாவட்டத் தலைமைக்கும் அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பட்டியலில் இடம்பெற்றவர்களின் வயது, அன்றாடம் செய்யும் பணி, புகைப்படம் ஆகியவையும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், இந்த பட்டியலானது மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் இடம்பெற்றுள்ள முக்கியமானவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் இதற்கு பிஎஃப்ஐ அமைப்பின் பயங்கரவாதப் பிரிவு களமிறக்கப்படும் என்றும் என்ஐஏ அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

தற்போது வரை பிஎஃப்ஐ ஒழித்துக்கட்ட நினைக்கும் பிரமுகர்களின் பட்டியலில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட, 972 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் இதற்கான சதித்திட்டம் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஃப்ஐ அமைப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவில் பிஎஃப்ஐ அமைப்புக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் ஐந்து ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்