தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கத்தில் தாலி வாங்க விரும்பிய 93 வயது முதியவர்: இலவசமாக அளித்த கடை உரிமையாளர்

2 mins read
e0525e69-8792-4436-a229-344b9ea6dbd0
நகைக்கடையில் 1,120 ரூபாயைக் கொடுத்து தாலிச் சங்கிலி வேண்டும் என்றார் முதியவர். - படம்: ஊடகம்

மும்பை: மனைவி மீதான அன்புமிகுதியால் தங்கச் சங்கிலி வாங்கி பரிசளிக்க விரும்பிய 93 வயது முதியவரின் அன்பைக் கண்டு நகைக் கடை உரிமையாளர் அந்தச் சங்கிலியை இலவசமாக வழங்கினார்.

மகாராஷ்டிராவில் உள்ள அம்போரா ஜஹாகிர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே. அவரது மனைவி சாந்தாபாய்.

அண்மையில் ஏகாதசி தினத்தை முன்னிட்டு இருவரும் பந்தர்பூர் ஆன்மிகத் தலத்துக்கு பாத யாத்திரை மேற்கொண்டனர்.

அங்கு சென்றதும், மனைவிக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பியுள்ளார் முதியவர் நிவ்ருத்தி. அருகில் உள்ள நகைக்கடைக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

வெள்ளை குர்தாவும் தொப்பியும் அணிந்து ஏழ்மையாகக் காணப்பட்ட அவரை, நகைக்கடை ஊழியர்கள் யாசகம் கேட்டு வந்திருப்பதாக தவறாகக் கருதிவிட்டனர்.

பிறகு, தங்கச் சங்கிலி வாங்க வந்திருப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர்.

நகைக் கடையில் பல சங்கிலிகளைப் பார்த்த பின்னர், தன்னிடம் இருந்த வெறும் 1,120 ரூபாயைக் கொடுத்து சங்கிலி வேண்டும் என்றார் முதியவர். விவரம் அறியாமல் முதியவர் அவ்வாறு கேட்டது நகைக் கடை உரிமையாளருக்கு மேலும் வியப்பளித்தது.

“இன்றைய தேதியில் தங்கத்தின் விலை தெரியாமல் அந்த முதியவர் பேசினார். மனைவி மீதான அவரது அன்பும் காதலும் என்னைக் கட்டிப்போட்டு விட்டது. ஆசிர்வாதத்தின் அடையாளமாக அவரிடம் இருந்து ரூ.20 மட்டும் பெற்றுக்கொண்டு அவர் விரும்பிய தாலிச் சங்கிலியை இலவசமாகக் கொடுத்துவிட்டேன்,” என்று கடை உரிமையாளர் தெரிவித்தார். முதியவர் நிவ்ருத்தி தம்பதியர்க்கு ஒரு மகன் உள்ளார் என்றாலும் இருவரும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்வதாக அவரது கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்தத் தம்பதியர் நகைக் கடையில் இருக்கும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்